அமெரிக்காவுக்கு அனுப்பிய 500 டன் கடல் உணவை பாதிவழியில் திருப்பி அனுப்பிய இறக்குமதியாளர்கள்
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழக நிர்வாகி செல்வின் பிரபு
கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழக நிர்வாகி செல்வின் பிரபு தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா இந்திய இறக்குமதி பொருளுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெரும் அளவு பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து அதிகப்படியான கடல் உணவு அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. இதில் இறால் மீன் பெரிய பங்கு வகிக்கிறது.
இறால்மீன் பல மீனவர்களின் வாழ்வாதாரம். பல பண்ணை இறால்தொழிலாளர்கள், பண்ணை இறால் விவசாயிகள் அனைவரும் இதனால் பாதிக்கப்படுவர்.இவ்வளவு பெரிய வரிவிதிப்பு அவர்களால் தாங்க முடியாத ஒரு சூழல் ஏற்படும். இறால் ஏற்றுமதியில் நாம் போட்டியை இழந்து விடுவோம். நமக்கு 50 சதவீதம் வரி என்று இருக்கும் பொழுது நமது போட்டியாளர்கள் நாடான இந்தோனேசியா, ஈக்குவாடா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 17, 18 சதவீதம் தான் வரி இருக்கிறது.

இந்திய இறாலின் விலை அமெரிக்க சந்தையில் கூடுவதால் அமெரிக்காவில் இந்திய இறால் வாங்கும் வியாபாரிகள் அனைவரும் ஆர்டர்களை கேன்சல் செய்கின்றனர். எந்த கண்டெய்னர்களையும் இறக்குமதி செய்ய வேண்டாம். இறக்குமதி செய்தாலும் நாங்கள் எடுக்க மாட்டோம் இல்லையென்றால் இந்த 50 சதவீதம் வரியை ஏற்றுமதி செய்யும் நீங்களே கட்டுங்கள் நாங்கள் கட்ட மாட்டோம் என்கின்றனர். இறால் மீன் தொழிலே நலிந்த லாபம் உடைய தொழில் இதற்கு 50 சதவீதம் வரி என்பது ஏற்றுமதியாளர்களால் முடியாத காரியம் மேலும் இந்த இறால் தொழிலை நம்பி பல கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தை முழுமையாக நிறுத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பெருமளவு தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். அரசு இதில் தலையிட்டு நிவாரணம் கொடுத்தால் பல கிராம ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக மத்திய அரசிடம் எங்களுடைய கோரிக்கைகளை கொடுத்துள்ளோம் அவர்கள் பரிசீலிப்பதாக எங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர். அவர்களிடம் முக்கியமாக நாங்கள் வைத்த கோரிக்கை மானிய விலையில் பொருளாதார உதவி செய்ய வேண்டும். குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும்.

மேலும் அமெரிக்காவுடன் பேசி 50 சதவீதம் வரியை நீக்கினால் உதவியாக இருக்கும். ஏனென்றால் அமெரிக்கா உலகிலேயே பெரிய பொருளாதார நாடு. இந்த பொருளாதாரத்தை சார்ந்து நாங்கள் 20 ஆண்டுகளாக பயணித்து உள்ளோம். உடனடியாக எங்களின் இறால் சந்தையை வேற நாடுகளுக்கு மாற்றுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஏற்கனவே இறால் உணவை மற்ற நாட்டு சந்தைகளுக்கும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். மேலும் அந்த நாட்டிற்கே இறால் மீன்களை கொடுக்கும்போது விலை அதிகம் குறைத்து கேட்பார்கள். இந்த சூழ்நிலை வந்தால் மீனவர்களும் பண்ணை விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.
நாங்கள் மீனவர்களிடமோ இறால் பண்ணி விவசாயிகளிடமோ கூடுதலாக விலை கொடுத்து இறால் மீன் வாங்க முடியாது. இந்தியாவில் கடல் உணவு கடந்த 20 வருடமாக நல்ல வளர்ச்சியை எட்டி உள்ளது. 2010 ல் வரும் 4500 கோடியாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி இன்று 64 ஆயிரம் கோடி எட்டியுள்ளது. இதில் அமெரிக்காவிற்கு மட்டும் மட்டும் 24 ஆயிரம் கோடி. அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் 24 ஆயிரம் கோடி பொருள் ஒரே இரவில் நிறுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இறால் பண்ணை விவசாயிகள் தற்போது இறால் உற்பத்தியை குறைத்துள்ளனர் அமெரிக்காவில் தான் பெரிய அளவுடைய இறால் வாங்குவார்கள். மற்ற நாடுகளில் சிறிய அளவிலான இறால்தான் வாங்குவார்கள் பெரிய இறால் வளர்த்தால் தான் விவசாயிகளுக்கு மீனவர்களுக்கு லாபத்தை கொடுக்கக் கூடியது சிறிய அளவிலான இறால்களை வளர்க்கும் போது அவர்களும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது
சமீபத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னர்கள் அமெரிக்காவிற்கு பாதி தூரம் சென்ற நிலையில், அந்த கண்டெய்னர்களை அனுப்ப வேண்டாம் அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள். என்று அமெரிக்க இறக்குமதியாளர்களிடம் இருந்து எங்களுக்கு இமெயிலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதை மீறி அமெரிக்காவிற்கு இறால் மீன் வந்தால் அதை நாங்கள் எடுக்க மாட்டோம். எனவே பாதி வழியிலேயே எல்லா கண்டெய்னர்களையும் திருப்பிக் கொண்டு செல்லுங்கள் என்று நிர்பந்திகின்றனர்.
500 டன் எடையிலான 50 முதல் 60 சரக்கு பெட்டகங்கள் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்து வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சுமார் ஆயிரம் முதல் 1500 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் இந்தியா முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் இதில் பணியாற்றுகின்றனர். 50 முதல் 60% தொழிலாளர்களுக்கு நாங்கள் வேலையை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
இவ்வாறு கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழக நிர்வாகி செல்வின் பிரபு கூறினார்.







