சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம்: மத்திய மந்திரியிடம் துரை வைகோ எம்பி கோரிக்கை
மதிமுக முதன்மைச் செயலாளர் வைகோ எம். பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இன்று (18.08.2025), ஒன்றிய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20665/20666) ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டி கோரிக்கைக் கடிதம் வழங்கினேன்.
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டுமென்பதை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.

கோவில்பட்டி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் முக்கியமான வணிக, தொழில்துறை மற்றும் கல்வி மையமாக விளங்குவதை கோரிக்கைக் கடிதத்தில் சுட்டிக்காட்டினேன்.
இங்கு வந்தே பாரத் விரைவு இரயிலுக்கு நிறுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பயனடைவர்.

மேலும், இந்த நிறுத்தம் கோவில்பட்டி நகர மக்களுக்கு மட்டுமல்லாமல், எட்டயாபுரம், கயத்தார், சாத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனளிக்கும்.
இது சென்னை மற்றும் திருநெல்வேலி நகரங்களுக்கான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்பதையும் வலியுறுத்தினேன்.
இயக்கத் தந்தை, தலைவர் வைகோ, 21.09.2023 தேதியிட்ட கடிதத்தில் இதே கோரிக்கையை முன்வைத்திருந்ததை அமைச்சருக்கு நினைவூட்டினேன்.
இந்தக் கோரிக்கை அப்பகுதி பொதுமக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அவர்கள் அனைவரும் அமைச்சரின் நேர்மறையான பதிலை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தேன்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், தலைவர் வைகோவின் கோரிக்கை ஏற்கனவே பரிசீலனையில் இருப்பதாகவும், தற்போது நானும் அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதால், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.
இவ்வாறு துரை வைகோ கூறி உள்ளார்.







