அரசு பஸ் சிறைபிடிப்பு; மாணவர்களுடன் கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம் முத்துலாபுரம் குறுவட்டத்தில் தாப்பாத்தி, அயன்வடலாபுரம், அச்சங்குளம் வேடப்பட்டி, மேலக்கரந்தை, சக்கிலிபட்டி, மாசார்பட்டி, அயன்ராஜாபட்டி,வெம்பூர் அழகாபுரி போன்ற கிராமங்களைச் சார்ந்த மாணவ மாணவிகள் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்
இம்மாணவ மாணவிகள் கோவில்பட்டியில் இருந்து அரசு பஸ் காலை 7:15க்கு புறப்பட்டு தாப்பாத்தி7.50 மேலக்கரந்தை காலை 7.55,வெம்பூர் காலை 8 மணிக்கு வரக்கூடிய பஸ்சில் பயணம் செய்து பள்ளிக்குச் செல்கின்றனர்.

நேற்று தினம் காலை 7:55க்கு மேலக்கரந்தையிலிருந்து பந்தல்குடி செல்வதற்கு மாணவர்கள் அப் பேருந்தில் ஏறினர் .வெம்பூர் நிறுத்தம் வந்தவுடன் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மேலக்கரந்தை மாணவர்களை சுமார் 11 பேரை படியில் இருந்து இறக்கி விட்டு பஸ்சை எடுத்து சென்று விட்டனர். இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வெம்பூரில் இருந்து மேலக்கரந்தைக்கு சுமார் 4கிலோமீட்டர் தூரம் நடந்து வீடு வந்து சேர்ந்தனர் .
இதனால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதே நிலை தொடர்ந்து கடந்த ஐந்தாண்டுகளாக இப் பேருந்தில் காலை 8 மணி பேருந்தில் அதிக கூட்டம் வருவதால் பள்ளி மாணவ மாணவியர் ஏற முடியவில்லை. இதனால் கூடுதல் பஸ் இயக்ககோரி கேட்டு பல தடவை போராட்டம் நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகள் கூடுதல் பஸ் இயக்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இது வரை கூடுதல் பஸ் இயக்கப்படவில்லை.

ஏற்கனவே கோவில்பட்டியில் இருந்து வரக்கூடிய பஸ்சில் அதிக கூட்டமிருப்பதால் எட்டயபுரம் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்கள் 80க்கும் மேற்பட்டோர் பயணம் செய்வதால் பஸ்சில் இட வசதி இல்லை. இதனால் தினந்தோறும் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமலும் தலைமை ஆசிரியரிடமும் தினமும் தண்டனை பெறுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்ல முடியாத 11 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று காலை 7:55க்கு மேலக்கரந்தைக்கு வரக்கூடிய அரசு பஸ்சை கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன். மற்றும் மேலக்கரந்தை முன்னாள் ஊராட்சி தலைவர் மாரீஸ்வரி தலைமையில் சிறை பிடித்து மறியல் செய்தனர் .
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதை தொடர்ந்து அங்கு வந்த மாசார்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் தூத்துக்குடி கோட்ட மேலாளர் மற்றும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பனிமனை மேலாளர், விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பனிமனை மேலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மாணவியர் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்
அப்போது இனிமேல் எவ்வித இடையூறும் இல்லாமல் பள்ளிக்கு அனைவரையும் ஏற்றி செல்வதாகவும் இதுபோன்று எவ்வித சிரமமும் இருக்காது. என்று உறுதி அளித்ததன் பேரில் பஸ் விடுவிக்கப்பட்டது,பள்ளி மாணவ மாணவிகள் பந்தல்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்







