எலுமிச்சைக்கு குறைந்த பட்ச விலை கிலோ ரூ 70 நிர்ணயம்; தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வலியுறுத்தல்
எஸ்,ரெங்கநாயகலு
தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் வழக்கறிஞர் எஸ்,ரெங்கநாயகலு விடுத்துள்ள அறிகையில் கூறி இருப்பதாவது:-
கோவில்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் அதிக அளவுக்கு எலுமிச்சை உற்பத்தி செய்யப்படும் கிராமம் வில்லிசேரி.
இக் கிராமத்தில் நுழைந்தவுடன் எலுமிச்சை பழங்களின் வாசனை நம்மை சுண்டி இழுக்கும்.ஆயிரம் ஏக்கர் அளவுக்கு புஞ்சை நிலத்தில் எலுமிச்சை பயிர் செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பே எலுமிச்சை ( வில்லிசேரி ) புவி சார் குறியீடு கேட்டு மாவட்ட ஆட்சியர், மாநில முதல்வர், மத்திய அரசிடம் முறையாக மனு கொடுத்து இருந்தோம்.
அது பரிசீலனை நிலையில் இருந்ததை, அண்ணாமலை (பிஜேபி) அப்போதே கெடுத்து குட்டி சுவர் ஆக்கி, அந்த வாய்ப்பை புளியங்குடி கிராம எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கி அரசியல் ஆதாயம் பெற பயன்படுத்தி கொண்டார்.
உண்மையில் வில்லிசேரி எலுமிச்சை தான் புவிசார் குறியீடு பெற தகுதி வாய்ந்த எலுமிச்சையாக இருந்தது. அந்த நல்வாய்ப்பு அண்ணாமலையால் பறிப்போனது கடந்த கால கசப்பு.

தற்போது எலுமிச்சைக்கு விலை இல்லை. விவசாயிகள் விளைவிக்கும் எலுமிச்சைக்கு கிலோவுக்கு வெறும் 10 முதல் 15 வரை தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
எலுமிச்சை சந்தை வில்லிசேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் தனியார் கொள்முதல் நிலையங்கள் உள்ளது. அவர்கள் வைத்தது தான் விலை. அதை அரசு கண்காணிப்பதாக தெரியவில்லை.
சில்லறை விலைக்கு ஒரு கிலோ ரூ 160 க்கு விற்கும்போதும், ஒரு பழம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யும் போது கூட விவசாயிகளிடம் ஒரு கிலோ விலை வெறும் 10 ரூபாயில் இருந்து 18 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆடி மதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா, கொடை விழா போன்ற விழாக்களோடு வளைகாப்பு , ஆடிபூர திருவிழாக்கள் அம்மன் கோவில்களில்.விமர்சையாக கொண்டாடினாலும் எலுமிச்சை தேவை பன்மடங்கு உயர்ந்த நிலையில் விலை உயர்வு இல்லா நிலை காணப்படுகிறது.
வியாபாரிகள் திட்டமிட்டு கொள்முதல் விலையை கட்டுப்படுத்தி அதிக லாபம் பார்த்து வருகிறார்கள்.. கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலைக்கு உண்டான வித்தியாசத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் தான்.

ஏற்கனவே கொய்யா உற்பத்தி படாதபாடுபடுத்தி, தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய வைத்து, இன்றைக்கு கொய்யா உற்பத்தியில் இருந்து விவசாயிகள் வெளியேறிவிட்டார்கள். அந்த நிலைமை எலுமிச்சைக்கு வந்துவிடக்கூடாது
ஏற்கனவே, எலுமிச்சை சாறு , எலுமிச்சை பவுடர் அதிக அளவில் தொழில்துறைக்கு தேவை இருப்பதாலும், வெளிநாடுக்கு தேவை இருப்பதாலும், தனியார் குழுக்கள் ஏற்படுத்தி அரசு போதிய நிதி ஒதுக்கி எலுமிச்சை பவுடர் மற்றும் சாறு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு முன்வரவேண்டும். அதற்கான வாய்ப்புகளை கண்டறிய தொழில் கொள்கையை அரசு வகுக்க வேண்டும்.
அப்போது மட்டுமே நிலையான விலை கிடைக்கும். எலுமிச்சை குறைந்த பட்ச விலை கிலோவுக்கு ரூ 70 விலை நிர்ணயம் செய்ய தமிழக அரசும் மத்திய அரசும் முன்வரவேண்டும்.ஆகவே, தமிழக அரசும் மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து எலுமிச்சை விவசாயிகளை பாதுகாக்க முன்வரவேண்டும். விவசாயத்தை பாதுகாப்பான தொழில் ஆக மாற்ற முன்வாருங்கள். இல்லையேல் உற்பத்தி பாதித்து, விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலை தொடரவே செய்யும்.
தற்போது வில்லிசேரி கிராமத்தில் அதிக அளவு மேற்கில் இருந்து வீசும் காற்றால் எலுமிச்சை காய்கள் தானாக விழுந்து அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது. அரசு எலுமிச்சை உற்பத்தி தொழிலை காக்க தனி வாய்ப்புகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்
இவ்வாறு தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் வழக்கறிஞர் எஸ்,ரெங்கநாயகலு கூறி உள்ளார்.







