8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி தொடரும்; மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மாநில கல்விக் கொள்கையில் தகவல்
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கல்விக் கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன்,. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. சந்தர மோகன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களில் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் குறைதீர் கற்பித்தலை வழங்கி வயதுக்கேற்ற வகுப்பு நிலைக்கு கொண்டுவரச் சிறப்பு கவனம் அளிக்கப்படும்.

* அனைத்து குழந்தைகளும் தடையின்றி அணுகுதல், குழந்தை மையச் சூழல், சிறப்புத் தேவைகள் உடைய குழந்தைகளுக்குமான பள்ளிக் கட்டமைப்பை தமிழ்நாடு அரசு மேம்படுத்தும்.
* மதிப்பீடுகளை மேற்கொள்ள மாவட்ட மற்றும் பள்ளி அளவில் ஆண்டுதோறும் சமச்சீரான தணிக்கை முறை கட்டாயப்படுத்தப்படும்.
* 1 முதல் 3-ம் வகுப்புகளில் பயிலும் ஒவ்வொரு குழந்தையும் வயதிற்கேற்ற படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணறிவுத் திறன்களை அடைவதை உறுதி செய்ய இயக்கம்சார் திட்டத்தினை மாநில அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.
* தமிழ்நாடு அரசு 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேக்கமின்மைக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. இக்கொள்கை, தேர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்ட ஆண்டு இறுதித் தேர்வுகளில் இருந்து விலகி தொடர்ச்சியான, மாணவர்களுக்கு உதவும் வகையில் அமைந்த, திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகளை வலியுறுத்துகிறது.

* தனிப்பட்ட உதவி மூலம் மாணவர்களது திறன் அடைவை உறுதி செய்து, 8-ம் வகுப்பு வரை தடையற்ற தேர்ச்சியினை உறுதி செய்ய வேண்டும்.
* மாணவர்களின் முன்னேற்ற அறிக்கைகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் இணைய செயலிகள் வாயிலாக மாணவர்களது முன்னேற்றம் மற்றும் இடைவினைத் திட்டங்களை தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.
* அனைத்து ஆசிரியர்களுக்கான ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல் மற்றும் கற்பித்தல் திறன்களை வளப்படுத்துவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர் ஆசிரியர் திறன்மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
* நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி முன்னெடுப்பின் மூலம் இதுவரை ரூ.755 கோடி நிதி திரட்டப்பட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில் திறன் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பயன்கள் பெறப்பட்டுள்ளன.
* சமூகக் காவல் மற்றும் விற்பனையாளர்களைக் கொண்டு பள்ளிக்கு அருகில் போதைப்பொருள்கள் நடமாட்டத்தைத் தடுப்பதில் பள்ளி மேலாண்மைக் குழு, உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்களை ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.







