கோவில்பட்டி அப்பனேரி ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளில் அப்பனேரி ஊராட்சி முக்கியமானதாகும். இந்த ஊராட்சியில் விரிவாக்க பகுதிகள் அதிகம் உருவாகி வருகின்றன,
அந்த வகையில் அப்பனேரி ஊராட்சியில் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள் பெருகிய வண்ணம் உள்ளன.இதை தொடர்ந்து இந்த ஊராட்சிக்கு படிப்படியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக குப்பை சேகரிக்கும் பணிக்காக இரண்டு பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் அப்பனேரி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா கார்டன், ராதாகிருஷணன் நகர்,பத்மாவதி கார்டன், சிற்றம்பலம் நகர், புதூர் லட்சுமியாபுரம், சுபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன,
தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிரைவர் தவிர ஒரு தூய்மை பணியாளர் இந்த வாகனத்தில் இருக்கிறார்.. ஒலிபெருக்கி மூலம் சுற்றுப்ப்புற சுகாதாரத்தை விளக்கும் பாடல் ஒலிபரப்பியபடியும், விசில் அடித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் இந்த வாகனங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்கப்படுகிறது,

இது நாள் வரை குப்பையை வீட்டின் அருகிலேயே எரிப்பதும், அல்லது கவர்களில் போட்டு குப்பை வெகுதூரம் கொண்டு போடுவதுமாக இருந்தது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் குப்பை குவியல்களை பார்க்கமுடியும். தற்போது வீட்டு வாசலில் குப்பை சேகரிப்பு மூலம் மக்கள் மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இது பற்றி அப்பனேரி ஊராட்சியில் விசாரித்தபோது ‘இன்னும் ஒரு வாகனம் கூடுதலாக கேட்டு இருக்கிறோம், விரைவில் வந்து விடும் என்று நம்புகிறோம். குப்பை சேகரிப்பு பணி இன்னும் 10 நாட்களில் சீராக நடைபெறும் “ என்று தெரிவித்தனர்,







