தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலையில் தயாரான மின்சார கார்கள்; முதல் விற்பனையை முதல்- அமைச்சர் தொடங்கி வைத்தார்

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் கார் முதல் விற்பனை தொடக்க விழா ஆகியவை இன்று காலை நடைபெற்றது,
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வந்தார்.
விமான நிலைய வரவேற்புக்கு பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வின்பாஸ்ட் ஆலைக்கு சென்றார்.. அங்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, ஆலையை திறந்து வைத்து, முதல் கார் விற்பனையை தொடங்கி வைத்தார். அந்த காரில் தனது கையெழுத்து போட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:-
மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி ஆகிறது.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

விழாவில்,தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அங்கு பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது,
மேலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில நிறுவனங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.







