கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தை தொடர்ந்து தந்தையும் கைது
கைதான் சுர்ஜித், தந்தை கிருஷ்ணன்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த 27-ம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் இவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சாரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து சுர்ஜித்தை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவரது பெற்றோரான சிறப்பு காவல் படை உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவின் செல்வகணேஷின் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணன் நெல்லை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கவின் கொலைக்கு பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தான் வழிவகுத்து கொடுத்தார் என்று கவினின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
கவின் சென்னையில் இருந்து நெல்லை வரும் தகவலை காசி பாண்டியன் தான் சுர்ஜித்திற்கு கொடுத்தார். கொலையாளி சுர்ஜித்தை உடனடியாக சரணடைய செய்ததும் காசி பாண்டியன்தான்.
காசி பாண்டியனும் கொலையாளியும் ஒரே சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்டபஞ்சாயத்து நடத்தப்பட்டது. மேலும் காதலை கைவிடும்படி கவினை அழைத்து காசி பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கவினின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.







