கோவில்பட்டியில் சாலைப்பணியாளர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டி சாலைப்பணியாளர் சங்கத்தினர் கைகளில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சாலைப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார்…
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் உமாதேவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சாலைப்பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் கிளாட்வின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் செல்லத்துரை, மாவட்ட பொருளாளர் ஜெசித்ரா, அரசு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் சின்னதம்பி, சாலைப்பணியாளர் சங்க திருமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கைகளில் தீப்பந்தம் ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-
*சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும்.

*மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும்.
*மாநில நெடுஞ்சாலைகளை தமிழக அரசே பராமரிக்க வேண்டும்.
*கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். *பணியின் போது உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் குடும்பத்தில் கருணை அடிப்படையில் பணி கேட்டு விண்ணப்பம் செய்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும்.
*தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத சாலைப்பணியாளர்களுக்கு ஊதியமாற்றத்தை அமல்படுத்த வேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,







