இலவச வீட்டுமனை பட்டா கோரி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்

புதூர் ஊராட்சி ஒன்றியம் சுப்பலாபுரம் அருந்ததியர் சமுதாய மக்கள் பயன்படுத்தும் மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தர வேண்டும். விளாத்திகுளம் வட்டாட்சியர் தீர்மானித்தது போல் சுப்பலாபுரம் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க நில ஒதுக்க உத்தரவிட வேண்டும். போலி பத்திரப்பதிவு மூலம் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்டிறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் காடல்குடி கணேசன் முன்னிலை வகித்தார். மாநில துணை செய்தி தொடர்பாளர் நெல்லை தமிழரசு, மாநில அமைப்பு செயலாளர் தச்சை மாடத்தி, மாரியம்மாள், வடக்கு மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் மகில்வேந்தன் மற்றும் சுப்பலாபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:-
, சுப்பலாபுரம் கிராமத்தில் வசிக்கும் அருந்ததியினர் மக்கள் பயன்படுத்தும், மயான பாதை ஆக்கிரமிப்பு, அவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் மகளிர் சுகாதார வளாகம் கடந்த 2 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த ஏப்.1-ம் தேதி விளாத்திகுளம் வட்டாட்சியரின் நேரடி பார்வையில், இந்த மக்களின் குறைகளை கண்டறிந்து நத்தம் புறம்போக்கு நிலத்தில் மகளிர் சுகாதார வளாகம் கட்டிக்கொடுக்க இடம் ஒதுக்கியும், அந்த நிலத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க மனுக்களை பெற்றும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய செயல்பட்டார்.

ஆனால், அப்பகுதியில் உள்ள தனிநபர், அந்த நத்தம் புறம்போக்கு நிலத்துக்கு தன்னிடம் நிலப்பத்திரம் உள்ளதாகவும், அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அருந்ததியினர் மக்களுக்கு அந்த நிலத்தில் எந்த சலுகையும் வழங்கக்கூடாது என வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் நெருக்கடி கொடுப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், அந்த தனிநபரிடம் உள்ள ஆவணம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவசரமாக பெறப்பட்ட நத்தம் சிட்டா அடஙகல் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணமாகும்.
எனவே, நத்தம் புறம்போக்கு நிலத்தில் சுப்பலாபுரம் அருந்ததியிர் மக்களுக்கு மகளிர் சுகாதார வளாகம் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்டவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







