காதல் விவகாரத்தில் என்ஜினியர் வெட்டிக்கொலை: உடலை வாங்க பெற்றோர் மறுப்பு
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரவணனும், கிருஷ்ணகுமாரியும் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றனர்.
இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார் (26) படித்துள்ளார்.

அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். கவின்குமார் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
இதனால் கவின்குமார் அடிக்கடி ஏரலில் இருந்து மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்து தனது காதலியை சந்தித்து பேசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நேற்று மதியம் கவின்குமாரின் தாத்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தாத்தாவை அழைத்துக்கொண்டு பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தனர்.

இதனை அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித் அறிந்துகொண்டார். இதற்கிடையே சிகிச்சை முடிந்ததும் கவின்குமார் சொந்த ஊருக்கு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு தயாராக நின்று கொண்டிருந்த சுர்ஜித், கவின்குமாரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுர்ஜித் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிஓடினார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கவின் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்,. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கவின்குமாரை அரிவாளால் வெட்டிகொலை செய்து விட்டு தப்பி சென்றது சுர்ஜித் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து போலீசார், சுர்ஜித்தை தேடி கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு கவின்குமார் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவர் காதலித்த பெண்ணின் தாய், தந்தை மீதும் வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.







