பிரதமர் மோடி, நாளை தூத்துக்குடி வருகை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம் பிரதமர் மோடி நாளை 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வருகிறார். தொடர்ந்து, சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலைய விரிவாக்கத்தை அவர் திறந்து வைப்பதுடன், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 80 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேமானந்த் சின்ஹா, நெல்லை சரக டிஐஜி பொறுப்பு சந்தோஷ் ஹாதிமணி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எஸ்.பி.க்கள் தலைமையில் சுமார் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விழா மேடையில் இருந்து மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய காவல் படையினருடன் இணைந்து தமிழக போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

முன்னதாக மாவட்டம் 27ஆம் தேதி காலை வரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் குறித்த விவரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சந்தேக நபர்கள் குறித்தும் கடந்த 3 நாள்களாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அரியலூரில் ரோடு ஷோ
தூத்துக்குடி நிகழச்சி முடிந்ததும் விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை அடைகிறார், அங்குள்ள அரசினர் விடுதியில் இரவில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.
இதையடுத்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வரும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி கோவில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்ய உள்ளார். மேலும், கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்படும் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
பின்னர், அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பின்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் சுமார் 1.30 மணியளவில் கோவிலில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சிக்கு செல்கிறார். அங்கிருந்து 2.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.







