கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம்; சிஐடியு மாநாட்டில் தீர்மானம்

கோவில்பட்டி ஒன்றிய சிஐடியு கட்டுமான சங்கத்தின் 4-வது மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு சங்க ஒன்றிய தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார்.. கமிட்டி உறுப்பினர் குருசாமி வரவேற்றார். ஒன்றிய செயலாளர் கணேசன் பணி அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட நிர்வாகி முத்துச்சாமி வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, மகாலட்சுமி, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாநாட்டில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*கட்டுமான பொருட்களான மணல், சல்லி, கம்பி, சிமெண்ட், பெயிண்ட், மரப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
*கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
*கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் இருந்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
* தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
*இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும்.
*கட்டுமான பணிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்.
*அனைத்து சிறு தொழில்களையும் பாதுகாக்க வேண்டும்.
*கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், சிஐடியு கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், கன்வீனர் மாரிச்சாமி, மாவட்ட நிர்வாகி அந்தோணி செல்வம், விவசாய சங்கத்தைச் சேர்ந்த மணி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.







