கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி 1 ம் தேதி ரோடு ஷோ; தீப்பெட்டி, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களையும் சந்திக்கிறார்
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஜூலை 31, ஆகஸட் 1-ம் தேதிகளில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதுதொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதன் முதலாக மக்களை சந்திக்கிறது இயக்கமாக அதிமுக உள்ளது. நாங்கள் மக்களை நம்பி உள்ளோம். ஆனால், திமுக கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு பிரச்சார பயணத்துக்காக ஜூலை 31-ம் தேதி விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகிறார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி காலை கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் நடக்கிறது.
மாலை 5 மணிக்கு இலக்குமி ஆலை மேம்பாலம் அருகே இருந்து ரோடு ஷோ நடக்கிறது. இந்த ரோடு ஷோ தேவர் சிலை முன்பு நிறைவடைந்து, அங்கு கூட்டம் நடைபெறுகிறது. பின்னர் இரவு ஓட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மக்கள் விரோத ஆட்சி, மக்களை நம்ப வைத்து வெறும் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் மக்களை சந்திக்க வருகின்றனர். அதனால் ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளோம். 5 ஆண்டுகள் ஒன்றும் செய்யாமல், மக்களிடம் எதிர்ப்பு குரல் வந்துவிடும் என்ற காரணத்துக்காக தான் ஓரணியில் தமிழ்நாடு என்று இல்லங்கள் தோறும் சந்தித்து வருகின்றனர். முதல்வர் எந்த சம்பவம் நடந்தாலும் ஒரே வரியில் ‘சாரி’ என்று முடித்துக் கொள்கிறார். அதே போல், ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று திமுகவினர் ‘சாரி’ கேட்டு வருகின்றனர். தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாததால், மக்களை சமாதானப்படுத்தவே, ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி கெஞ்சும் நிலைக்கு திமுக ஆளாகிவிட்டது. ஒரு முதல்வர் என்றால் மக்களுடன் தான் இருக்க வேண்டும். அவர் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என தொடங்கி உள்ளார். கடந்த முறை விடியல் ஆட்சி தருவோம் என தமிழகம் முழுவதும் புகார் பெட்டிகள் வைத்தார். அந்த பெட்டிகள் இதுவரை திறக்கப்படவில்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்து, அதிகாரிகள் வைத்து இல்லங்கள் தோறும் சென்று, உறுப்பினர் சேர்க்கையில் அதிகாரிகளே ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மக்கள் தொடர்புத்துறையே உள்ளது. 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசின் செய்தி தொடர்பாளர்களா அல்லது திமுக செய்தி தொடர்பாளர்களா என்பதை தலைமை செயலாளர், முதல்வர் பதிலளிக்க வேண்டும். இதற்கு இன்றுவரை முதல்வர் பதில் அளிக்கவில்லை. திமுகவுக்கு மக்களை சந்திக்க பயம். அவர்கள் மக்களை நம்பாமல், கூட்டணி கட்சிகளை நம்பி தேர்தல் சந்திக்க உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனுக்கு, இந்த ஆட்சியின் அவலத்தை எடுத்துக்கூற முதிர்ச்சி வேண்டும். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நியாயத்துடன் போராடிய காலம் வேறு. ஆனால், இன்றைய கம்யூனிஸ்ட்கள் ஆட்சியாளர்களுக்கு ஜால்ரா போடும் அளவில், அதுவும் முத்தரசன் போன்றோர் செய்வது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.







