விஜயகாந்த் பிறந்தநாளில் த.வெ.க. 2-வது மாநாடு ;மதுரையில் நடக்கிறது
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.8.2025) திங்கட்கிழமை அன்று நடைபெறுகிறது. அன்றைய தினம் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் ஆகும். மேலும் விஜயின் திருமணம் நாளும் அந்த நாள் தான்.

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடலை அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று அதிகாலையில் பந்தல்கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்டார். மேலும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், மதுரை மாவட்ட மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள், மகளிர் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டுக்கான அனுமதி மனுவை கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கினார். இதனையொட்டி மதுரை எஸ்பி அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.







