வேலைநிறுத்த போராட்டம்: கோவில்பட்டியில் பஸ்கள் ஓடின -வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன

நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

]
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆட்டோக்கள் ஓடாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில மையத்தின், ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு எங்களது கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதோடு, கலந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளது’ என்று கூறி உள்ளார்.

சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. அரசு ஊழியர்மற்றும் வங்கி ஊழியர்கள்சங்கங்களும் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் வங்கிகள் இயங்காது.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஈடுபடக்கூடாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவில்பட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று வழக்கம் போல் பஸ்கள் ஓடுகின்றன. அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. முக்கிய வழித்தடங்களில் பாதுகாப்புக்கு போலீசார் பயணம் செய்தனர்.
இதே போல் ஆட்டோக்களும் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சாலைகளில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து காணப்படுகிறது.
மேலும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் வழக்கம் போல் செயல்படுகின்றன. கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள யூனியன் வங்கி செயல்படவில்லை







