துறையூர் ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அருகே துறையூர் ஊராட்சியில் சுமார் 32 ஆண்டுகளாக ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து அவர் பணியாற்றி வருவதால் அப்பகுதி பொதுமக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதிலும், ஊராட்சி மன்றத்தின் செயல்பாட்டிலும் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அகில இந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்க ஊராட்சி செயலாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் செண்பகராஜ், தமிழ் பேரரசு கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர் மகாராஜா, ஜெய் பீம் அறக்கட்டளை தலைவர் தாவீது ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திரளானோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் ஜூலை 15-ம் தேதி பசுவந்தனைச் சாலை துறையூர் விலக்கில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.







