கோவில்பட்டி புது ரோட்டில் மின் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடி சரி செய்த மெக்கானிக்
கோவில்பட்டி நகரின் மிக முக்கியமான சாலையான புதுரோடு, ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது.
இந்த சாலையில் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் கிடையாது. சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்தும் சோடியம் விளக்கு நிறுவபடாமல் இருந்தது. புதுரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முதல் முச்சந்தி விநாயகர் கோவில் வரை போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.யின் பரிந்துரையின்படி பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 30 எல்.இ.டி. மின் விளக்குகள் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஆரம்பகட்டமாக மின் இணைப்பு கொடுக்கும்பணி நடைபெற்றது.
சாலையின் நடுவே 30 இடங்களில் மின் கம்பங்கள் நடப்பட்டு எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக சாலையின் நடுவே மின்வயர்கள் கொண்டு செல்ல பள்ளம் தோண்டி, சில இடங்களில் சரியாக மூடப்படாமல் உள்ளது.

அந்த வகையில் புது ரோடு இறக்கத்தில் யூனியன் வங்கி அருகே மின் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உருவானது.
இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் தனிப்பட்ட நபராக மெக்கானிக் ஒருவர் இன்று அந்தப் பகுதியில் பள்ளத்தில் மண் அள்ளி போட்டு அதை சரி செய்தார். இதைப் பார்த்தவர்கள் அவரை பெரிதும் பாராட்டி சென்றனர்.







