கோவில்பட்டியில் உள்ள காங்கிரஸ் சொத்துகள்: பாதுகாப்பு குழு ஆய்வு
தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு தலைவர் கே.வி.தங்கபாலு, இணை செயலாளர் நித்தின் கும்பல்கர், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் செல்வம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி ஆகியோர் கொண்ட குழு நேற்று கோவில்பட்டியில் உள்ள காங்கிரஸ் சொத்துகள் தொடர்பாக ஆய்வு செய்ய வந்தது.

அவர்கள் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், எப்போதும் வென்றான் பகுதியில் உள்ள சொத்துக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பிரேம்குமார், காமராஜ்,பொன்னுச்சாமி பாண்டியன், பெத்துராஜ், சுப்பராயிலு, பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், மகேஷ்குமார்,மாவட்டச் செயலாளர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் அய்யலுசாமி,மாவட்ட பொதுச்செயலாளர்கள் சண்முகராஜ். ஐஎன்டியூசி ராஜசேகரன், சிவப்பிரகாசம், மாவட்ட சமூக ஊடகப்பிரிவு தலைவர் ராஜசேகரன், வட்டாரத் தலைவர் செல்லத்துரை,சக்தி விநாயகம்,வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிந்தனர்.

பின்னர் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக காங்கிரஸ் தலைவர்கள், நலம் விரும்பிகள், அரசாங்கம் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் எங்களுக்கு நிறைய சொத்துகளை கடந்த காலங்களில் வழங்கி உள்ளனர். அந்த சொத்துக்களை அனைத்து மாவட்ட, நகரம் மற்றும் கிராமங்களில் காங்கிரஸ் கட்சியினர் பராமரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் காங்கிரஸ் சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து, அவற்றை பாதுகாப்பது, பராமரிப்பது மற்றும் அதனை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்று, காங்கிரஸ் வளர்ச்சி, சமூக வளர்ச்சி, காந்திய கொள்கைகளில் முன்னேற்றம் என இவைகளை பற்றி சரியான பகுத்தாய்வுகள் நடத்தி காங்கிரஸ் முனைப்பாக எடுத்துச் செல்கிறது. காங்கிரஸ் சொத்துககள் இருக்கும் இடங்களுக்கு சென்று அவற்றை பார்த்து, சிறப்பாக பராமரிக்க அறிவுரை வழங்கி வருகிறோம்.
காங்கிரஸ் மாநில கட்சி அல்ல. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியை அடுத்தக்கட்டத்துக்கும், எதிர்கால திட்டங்களுக்குமான இயக்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அவற்றை செயல்படுத்தி வருகிறோம். காங்கிரஸ் கொள்கைகள் மகாத்தான கொள்கைகள். காந்தியம் தான் இந்தியாவுக்கு விடிவெள்ளி என மனதில் வைத்து செயல்படுகிறோம்.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை தான் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்கும். தமிழ்நாட்டை பொருத்தவரை இண்டியா கூட்டணி தலைவராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அகில இந்திய அளவில் ராகுல் காந்தி இண்டியா கூட்டணியின் முகாமாக உள்ளார். அதே போல், தமிழகத்தில் 20 ஆண்டுகளாக இந்த கூட்டணியில் உள்ளோம். இது கொள்கை மற்றும் வெற்றிக்கூட்டணி.
எனவே, வருங்காலத்திலும் இந்த கூட்டணியை தமிழக மக்கள் அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கே. வி. தங்கபாலு கூறினார்.







