விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம்; விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டது,. இங்கு 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.
ஆனால் இந்த சேவை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. குறித்த நேரத்துக்கு விமானங்கள் வராததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு 1996-ம் ஆண்டு என்.இ.பி.சி என்னும் தனியார் நிறுவனம் தூத்துக்குடியில் இருந்து விமானசேவையை தொடங்கியது.

இந்த நிறுவனம் தூத்துக்குடி-கொச்சி-சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. இதன் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்ல 4½ மணிநேரம் ஆனது. இதனால் இந்த சேவை 6 மாதத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஏர்டெகான் தனியார் விமான சேவை தொடங்கப்பட்டது.
தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் கோடை விடுமுறையில் சுமார் 13 ஆயிரம் பேர் தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருக்கு சென்று உள்ளனர். சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சுமார் 15 ஆயிரம் பேர் தூத்துக்குடிக்கு வந்து உள்ளனர்.

இதே போன்று கடந்த மாதம் சுமார் 11 ஆயிரத்து 500 பேர் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும், 11 ஆயிரத்து 241 பேர் சென்னை, பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கும் வந்து உள்ளனர். நாளுக்குநாள் விமானசேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்துவது அவசியமாகிவிட்டது.
இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாறப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது.
இதனால் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் இந்த மாதம் இறுதியில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பிறகு மிகப்பெரிய ஏ – 321 ரக ஏர்பஸ் விமானங்களும் தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும்.







