கோவில்பட்டி அருகே மாட்டுவண்டி பந்தயம்; கிராம மக்கள் ஆரவாரம்

கோவில்பட்டி அருகே கிழவிபட்டி மலை அலங்காரி அம்மன், புதுஅம்மன், துர்க்கை அம்மன், சடையாண்டி சாஸ்தா, மலையடி கருப்பசாமி திகோயில் ஆனி பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடந்தது.
சிறிய மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய மாட்டு வண்டி போட்டிக்கு 6 மைல் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் 13 வண்டிகள் கலந்து கொண்டன.
போட்டியை திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் தொடங்கி வைத்தார். போட்டியில் முதலிடம் பிடித்த பச்சை பெருமாள்புரம் மாட்டு வண்டிக்கு ரூ.30 ஆயிரம், 2-வது இடம் பிடித்த தொட்டம்பட்டி மாட்டு வண்டிக்கு ரூ.20 ஆயிரம், 3-வது இடம் பிடித்த பேக்கரி மாட்டு வண்டிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டிக்கு 5 மைல் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 23 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன.
போட்டியை அமமுக கோவில்பட்டி நகர துணைச் செயலாளர் சிவக்குமார் பாண்டியன் தொடங்கி வைத்தார். போட்டியில் முதலிடம் பிடித்த துரைச்சாமிபுரம், பொம்முராஜ் மாட்டு வண்டிகளுக்கு ரூ.25 ஆயிரம், 2-வது இடம் பிடித்த காமநாயக்கன்பட்டி தம்பலூரணி மாட்டு வண்டிகளுக்கு ரூ.15 ஆயிரம், 3-வது இடம் பிடித்த கூழையனூர், கயத்தார் மாட்டு வண்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுத்தொகைகள் பிரித்து வழங்கப்பட்டன.
தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டிக்கு 4 மைல் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியை அமமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் குமார் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

போட்டியில் முதலிடம் பிடித்த சுரேஷ்குமார் மாட்டு வண்டிக்கு ரூ.15 ஆயிரம், 2-வது இடம் பிடித்த பால்பண்ணை மாட்டு வண்டிக்கு ரூ.10 ஆயிரம், 3-வது இடம் பிடித்த தொட்டம்பட்டி மாட்டு வண்டிக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
போட்டிகளை சாலையின் இருபுறமும் நின்று கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். சீறிப்பாய்ந்து ஓடிய மாடுகளை பார்த்து ஆரவாரம் செய்தனர்,







