பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை; செயற்குழு கூட்டத்தில் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேர் பங்கேற்றனர்.
செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகள் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. மலிவான அரசியல் ஆதாயத்திற்கு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய பா.ஜனதா நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமதனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது.
சமூக நீதியும், சகோரத்துவமும் ஆழமாக வேரூன்றிய மண் தமிழகம். தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து பா.ஜ.,க அரசியல் செய்தால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது.

தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. . திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சுயநல அரசியல நலனுக்காக கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக
கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும். தி.மு.க., மற்றும் பா.ஜ.,க.விற்கு எதிராக கூட்டணி இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன். இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்.

நமது விவசாயிகளுக்காக நாம் உறுதியாக நிற்க வேண்டியது நமது கடமை. நாம் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். பரந்தூர் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும் தான் மக்கள் பற்றி அக்கறை இருக்குமா? பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து விட்டு, மிக பெரிய நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை அழித்து விட்டு, அந்த இடத்தில் தான் விமான நிலையம் கட்டி ஆக வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நீங்கள் ஏன் மக்களின் முதல்வர் என்று நாகூசாமல் சொல்றீங்க. உங்களுக்கும், பரந்தூர் விமான நிலையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்கள். 1500 குடும்பங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சாதாரணமாக தெரிகிறதா?
இவ்வாறு விஜய் பேசினார்.
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை விஜய்க்கு வழங்கப்பட்டது.
*தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது மதுரையில் நடத்துவது.
*செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை விஜய் மக்களை சந்திப்பது, *த.வெ.க.,விற்கு எதிராக கபட நாடகம் ஆடும் தி.மு.க., அரசின் அராஜக போக்கிற்கு கண்டனம்..
*கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு பெற வேண்டும்,
*மாநில சுயாட்சி, சட்டம் ஒழுங்கை காக்க தவறிய தமிழக உள்துறை அமைச்சருக்கு கண்டனம்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







