படர்ந்தபுளி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி தாலுகா தோணுகால் ஊராட்சி எல்லைக்குட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தில் உள்ள மயானத்தில் கொட்டகை மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும், புதிதாக தெருவிளக்கு அமைக்க வேண்டும், இடிந்த நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை அகற்றி புதிதாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும் ஆகிய கோரிக்கைகைளை வலியுறுத்தி பலமுறை மனு கொடுத்து போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த முறை நடந்த காத்திருக்கும் போராட்டத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் எடுத்த முடிவுகள் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை.
எனவே, அரசு அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு படந்தபுளி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி ஒன்றிய குழு சார்பாக இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, விஜயராஜ்,முத்துராஜன் படர்ந்த புளி கிளை செயலாளர் காமராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் தினேஷ்குமார் மற்றும் படர்ந்தபுளி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி வளர்ச்சி துறை அதிகாரி தெருவிளக்கு, சாலை வசதி சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.







