மதுரை ஆன்மீக மாநாட்டில் பேசிய தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது ஒரு தலைப்பட்சமானது; இந்து முன்னணி கண்டனம்
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார்
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை, இந்து ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளது.
மாநாட்டில் தலைமையேற்றுப் பேசிய இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் மாநாட்டில் உரையாற்றிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர். அண்ணாமலை மாநாடு ஏற்பாடு செய்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. திமுக அரசின் அதிகார துஷ்பிரயோக போக்கை காட்டுகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்து மக்கள் பக்தியோடு நெற்றியில் இடும் சின்னங்களை தரக்குறைவாகப் பேசிய நிலையில் மாண்புமிகு உயர்நீதிமன்றமே அவர் மீது வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தியும் இன்றுவரை வழக்கு பதிவு செய்ய துப்பில்லாதது தமிழக காவல்துறை.
ஆ.ராசா உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் இந்து மதத்தையும், இந்துக்கள் வழிபாட்டையும், இந்துப் பெண்களையும் அவதூறாக, கேவலமாக பேசிய நிலையில் அவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்ய திராணியில்லாத காவல்துறை, மதுரை ஆன்மீக மாநாட்டில் இந்து ஒற்றுமைக்காகப் பேசிய தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது ஒரு தலைப்பட்சமானது.
முருக பக்தர்களின் மாநாட்டின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு நடு நடுங்கிப் போய் இதுபோன்று சிறுபிள்ளைத்தனமான செயல்களில் ஈடுபடுவதை பார்த்துக்கொண்டிருக்கும் இந்து மக்கள் திமுகவிற்கு உரிய நேரத்தில் பாடம் புகட்டுவார்கள்.

இந்துமுன்னணி ஆயிரமாயிரம் வழக்குகளையும், கைதுகளையும் சந்தித்து வளர்ந்த மக்கள் இயக்கம். தமிழக அரசின் இது போன்ற அதிகார மிரட்டல்களுக்கு எல்லாம் இந்து மக்கள் ஒரு துளியும் அஞ்சப் போவதில்லை. காலம் விரைவில் மாறும். திமுகவும், காவல்துறையும் அப்போது இந்த அடக்குமுறைக்கு எல்லாம் பதில் சொல்லும் நிலை உருவாகும்.
திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை இந்துமுன்னணி சட்டப்படி எதிர்கொள்ளும். பொய் வழக்கு பதிவு செய்து இந்து இயக்கத் தலைவர்களின் கருத்து சுதந்திரத்தை மிரட்டிப் பறிக்க நினைக்கும் தமிழக அரசின் ஆணவப் போக்கை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு வி.பி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.







