அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம்
Oplus_16777216

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று நடைபெற்றது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*ஈரோட்டில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்ற கழகத்தின் 31 ஆவது பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தின்படி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் திராவிட மாடல் அரசு தொடர்ந்திடவும், இந்துத்துவ மதவாத சக்திகளை முறியடிக்கவும், கழகம் எடுத்த முடிவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைபிடிப்பது என்று கழக நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.
*இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்டிராவை உருவாக்க முனைந்துள்ள ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் செயல் திட்டங்களை ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
*நாடு முழுதும் கொந்தளித்துள்ள உழவர்களின் கவலையைப் போக்க , வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

*மதுரையில் ஜூன் 22ஆம் தேதி இந்துத்துவ அமைப்புகள் முன்னின்று நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிட இயக்கக் கோட்பாடுகளை இழிவு படுத்தியும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய தலைவர்களை சிறுமைப் படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெறச் செய்ததற்கு மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
* அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடத்தை நிரப்பக்கூடாது; அந்த பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடரக்கூடாது; அந்த ஆண்டோடு அப்பாடப்பிரிவை, மூட வேண்டும் என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கழக நிர்வாக் குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







