காதல் திருமண விவகாரத்தில் கடத்தல் சம்பவம்: பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. வை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைப்பு
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் சகோதரரை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தியை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பூவை ஜெகன்மூர்த்திக்கு உத்தரவிட்டது. அதன்படி அவர் விசாரணைக்கு ஆஜரானார்.

இதற்கிடையே பூவை ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமீன் மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான வக்கீல், மற்றும் போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல் ஆகியோர் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர் .
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘சிறுவன் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த வாக்குமூலம் மற்றும் செல்போன் உரையாடல்களில் இருந்து இந்த சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பகட்ட முகாந்திரங்கள் உள்ளன. மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

ஜெகன்மூர்த்தி மனு தள்ளுபடியான நிலையில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமறைவு ஆனதாக சொல்லப்படுகிறது. ஜெகன்மூர்த்தியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







