கோவில்பட்டி: ரெயிலில் ஏறமுயன்ற போது தண்டவாளத்தில் தவறி விழுந்த வாலிபர்- நடைமேடையை உடைத்து மீட்பு

கோவில்பட்டி சாலை புதூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் வீரபிரசாத். இவர் திருவாரூரில் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர் இன்று மனைவி பிருந்தாவுடன் திருவாரூர் புறப்பட்டார்.
இதற்காக அவர் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் விருதுநகர் சென்று அங்கிருந்து திருவாரூர் செல்லும் ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டார். இதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு ரெயில் நிலையம் வந்தார்.
ரெயிலுக்காக இரண்டாவது பிளாட்பாரத்தில் காத்திருந்தார்..காலை 6.04 மணிக்கு வந்துவிட்டு 6.06 மணிக்கு புறப்பட்டு செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் குறிபிட்ட நேரத்தில் கோவில்பட்டி வந்தது,

ரெயில் நின்றதும் மனைவியை முதலில் ஏறசெய்த வீரபிரசாத், ரெயிலில் ஏற முயன்றபோது படிக்கட்டில் கால் வைக்கும் போது தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தண்டவாளத்தில் நின்ற ரெயிலுக்கும், நடைமேடைக்கும் நடுவில் விழுந்த அவர், கஷ்டப்பட்டு எழுந்து விட்டார். ஆனால் வெளியே வரமுடியவில்லை, இதற்கிடையே ரெயில் கிளம்பிவிடுமோ என்ற பயம் எழுந்தது,
இதுபற்றி ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரெயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வீரபிரசாத்தை மீட்கும் பணி தொடங்கியது. நடைமேடையை சிறிது உடைத்தால் தான் அவரை மீட்க முடியும் என்ற நிலையில் உடனடியாக அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நடைமேடையை உடைத்து சில நிமிட போராட்டத்துக்கு பிறகு வீரபிரசாத் பத்திரமாக மீட்கப்பட்டார். உனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே 46 நிமிடதாமதத்துக்கு பிறகு தாம்பரம் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.







