கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?
மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்களாக துவார பாலகர்களையும் நிர்மாணிக்க வேண்டும் என்று ஆகம விதி வலியுறுத்துகிறது.
நீண்ட பெரிய கைகளும், குறுகிய இடையும், கோரைப் பற்களும் கொண்ட பூத கணங்கள் இவை என்று வர்ணிக்கப்.பட்ட போதிலும், சாந்த சொரூபம் கொண்ட துவாரபாலகர்களையும் நாம் அநேக ஆலயங்களில் காணத்தான் செய்கிறோம்.

ஆகம சாஸ்திரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் இந்த மாறுதலுக்குக் காரணம் விளங்கும்.
பெருமாள் கோயில் துவார பாலகர்கள்: விஷ்ணு ஆலயங்களில் உள்ள துவாரபாலகர்கள் ஜயனும், விஜயனும் ஆவர்.
இவர்கள் வைகுண்டத்தில் எம்பெருமானுக்கு துவாரபாலகர்களாக இருந்தவர்கள் சனத்குமாரர்களின் சாபத்தினால் மூன்று பிறவிகளில் அசுரர்களாக இருந்து, பின்னர் திருமாலின் சேவைக்கே அவர்கள் வந்து சேர்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த துவாரபாலகர்கள் கரங்களிலே சங்கும் சக்கரமும் கதாயுதமும் ஏந்திக் காட்சி தருகின்றனர்.
சிவாலயங்களில் துவார பாலகர்களுக்கு சண்டன், பிரசண்டன் என்ற பெயர்கள் வழங்குகின்றன. இவர்கள் வீராதி வீரர்கள். தமிழில் வழங்கப்படும் ஒரு பழமொழி தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்ட, பிரசண்டன்
இதன்மூலம் இந்த துவாரபாலகர்கள் பற்றிய விவரத்தை முற்காலத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை உணரலாம்.

அம்மன் சன்னதியைப் பாதுகாக்கும் துவாரபாலகி (பெண்)களை ஹரபத்ரா, சுபத்ரா என்று அழைக்கிறார்கள்.
மூலஸ்தானத்தின் வாயிலில் மட்டுமன்றி தேர்களிலும், தெப்பங்களிலும், ராஜகோபுரங்களிலும்கூட இந்தத் துவார பாலகர்களைக் காணலாம்.
தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுர துவாரபாலகர்கள் காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளனர்.
கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்லவேண்டும் என்பது ஆலய தரிசன விதி







