நாகூர் அருகே உத்தம சோழபுரம் கதவணை திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு; நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை


நாகூர் அருகே உத்தமசோழபுரத்தில் கட்டப்படும் கதவணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் இன்று நடைபெற்றது. ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர் நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் கமல்ராமன்,துணை செயலாளர் சேகர், திருமருகல் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட போராட்ட குழு நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததால் வெயிலின் கொடுமையால் பெண்கள் மயக்கமடையும் நிலை ஏற்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மர நிழலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரழிவை அரசுக்கு எடுத்துரைத்து கதவணை திட்ட பணியை பூதங்குடிக்கு மாற்றம் செய்ய உதவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை சந்திக்க மறுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாற்றுப்பாதை வழியாக சென்று விட்டார்.
இதனை அறிந்து ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக கோஷமிட்டனர் பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக விவசாயிகளை சந்தித்து சமாதானப்படுத்தி உங்கள் கோரிக்கை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதி அளித்தார் இதனை ஏற்றுக் கொண்டு
ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.பின்னர் செய்தியார்களிடம் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயர்ந்ததால் கடலில் கலக்கும் ஆறுகள் வழியே கடல் நீர் உட்புகுந்து 40 கிலோ மீட்டர் வரையிலும் குடியிருப்பு மற்றும் நிலப்பகுதிகளுக்குள் நுழைந்து ஒட்டுமொத்த நிலப்பகுதியும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது.

2016 முதல் தமிழக அரசு கடல் முகுத்துவார நதிகள் மறுசீரமைப்பு பணிகளைஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் முதல் கட்டமாக 960 கோடி ரூபாய்க்கு மேற்கொண்டு கடல் முகத்துவாரத்தில் கதவணைகள் அமைக்கப்பட்டு கடல் நீர் உட்புவதை தடுப்பதற்கான் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் நாகப்பட்டினம் அருகே நாகூர் கடற்கரையில் இருந்து ஏழரை கிலோமீட்டர் தூரத்தில்
உத்தமசோழபுரத்தில் நீர் பாசன துறை மூலம் 50 கோடி ரூபாய் செலவில் கதவணை அமைக்கும் பணி துவங்கியுள்ளனர். இப்பணி முடிவடைந்தால் ஏழரை கிலோமீட்டர் கடல் நீர் உட்புகுந்து இரு கரையோரம் உள்ள 32 கிராமங்களில் நிலத்தடி நீர் பறிபோகும்.சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும்.

ஒட்டுமொத்தமாக திமுக மாவட்ட செயலாளர் கவுதமனின் ஆதரவு பெற்ற இறால் பண்ணையர்களின் நலனுக்காக கடல் நீரை உள்ளே கொண்டு வந்து பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே விவசாயிகள் நலன் கருதி கடல் முகத்துவாரத்தில் அஇஅதிமுக அரசு ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி கடல் நீர் உட்புவதை தடுக்கும் வகையில் பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி 32 கிராம மக்கள் அனைத்து கட்சியை சார்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் ஏராளமான காவல் துறையை உத்தமசோழபுரம் கிராமத்தில் குவித்து வைத்து ஒரு மாதமாக முள்வேலி முற்றத்துக்குள் அடைத்து வைத்து இலங்கை அரசு சித்திரவதை செய்தது போல போல விவசாயிகளை அடைத்து வைத்து அடக்குமுறையை ஏவி வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டாவில் பல கிராமங்கள் அழிவை சந்திக்கும் நிலை ஏற்படும்.. எனவே உயர் மட்ட குழுவை அனுப்பி உத்தம சோழபுரம் கதவணை குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பூதங்குடியில் மண் வகைப்பாடு சரியில்லை என்று சொல்லி வருவது உண்மைக்கு புறம்பானது. பொதுமக்கள் குறிப்பிடும் பூதங்குடி அருகே 3 உயர்மட்ட பாலங்களும்,ஈசிஆர், விழுப்புரம் – தூத்துக்குடி போன்ற உயர்மட்ட சாலைகளும் செல்கிறது. இந்நிலையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் அரசுக்கு தெரிவித்து வருகிறார்.
எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உண்மையை அரசுக்கு எடுத்துரைத்து அமைதியை ஏற்படுத்த வேண்டிய மாவட்ட ஆட்சியர் சுயநலத்திற்காக ஒப்பந்தக்காரருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களையும் புறக்கணித்து அவமதித்துள்ளார். எனவே அரசுக்கும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பிரிவினையை உருவாக்கும் வகையில் செயல்படும் மாவட்ட ஆட்சியர் ஆகாஷிற்கு எதிராக நாகை மாவட்டத்தில் எந்த கிராமத்திற்கு சென்றாலும் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரிக்கிறேன்.
தமிழக முதலமைச்சர் நேரில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். அதுவரையிலும் கட்டுமான பணியை நிறுத்தி வைத்து மாற்று இடத்தை ஆய்வு செய்து அதற்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமானத்தை மேற்கொண்டு கடல் நீர் உட்பகுவதை தடுத்து நிறுத்தி விளைநிலங்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்
இவ்வாறு பி. ஆர். பாண்டியன் கூறினார்.







