மதிமுக 32 வது ஆண்டு தொடக்க விழா; வைகோ கட்சி கொடியேற்றினார்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமைக் கழகம் தாயத்தில் உள்ள பெரியார், அண்ணா திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு மற்றும் நீர் மோர் வழங்கினார்
துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு-இராசேந்திரன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராசேந்திரன், மா.வை.மகேந்திரன், பூவை மு.பாபு, கருணாகரன், தென்றல் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி.வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நான்கே நான்கு ஆசை வார்த்தைகள் கூறினால், ஆயிரமாயிரம் பேர்கள் அணி திரள்வார்கள் என்ற நிலையில், தலைவர் வைகோ தனது பயணத்தை தெளிவாக வரையறுத்தார்,
“என்னோடு வந்தால் பட்டமோ பதவியோ கிடைக்காது. இது முள்ளும் கல்லும் நிறைந்த பாதை. செந்நீரும் கண்ணீரும் சிந்த நேரிடும். சிறைச்சாலைக்கும் செல்ல நேரிடும். அதற்கு சித்தமானவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள்.”என்று கூறி, திராவிட இயக்கத்தின் கொள்கை வலிமையுள்ள தூணாக, மாபெரும் இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.
உயர் பதவிகள் ஒரு இயக்கத்தை தேடி வந்தால், அது அந்த இயக்கத்தின் தலைமைக்கு தான் சென்று சேரும் என்ற விதியை, அரசியலில் அதிசயமாக திகழும் மதிமுக மாற்றி அமைத்தது. தலைவர் வைகோவுக்காக வந்த ஒன்றிய அமைச்சர் பதவியை தனது சகாக்களுக்கு பெற்றுக் கொடுத்து அழகு பார்த்தவர் தலைவர் வைகோ. இதுதான் மதிமுகவின் உயர்நிலை ஜனநாயகமாக கருதப்படக் கூடிய அளவு உன்னதமான இடத்தை பெற்றது. பணபலமோ, சினிமா கவர்ச்சியோ, சாதி-மத-இனவாத அரசியலோ இல்லை. ஆட்சி அதிகாரமும் இல்லை. ஆனால், அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, இலட்சியத்தில் உறுதி ஆகியவை மதிமுகவின் அடையாளங்களாக விளங்கின. இவை தான் மக்களை மதிமுக பக்கம் ஈர்த்தது; எப்போதும் மக்கள் பக்கமே மதிமுகவை நிற்கச் செய்தது.

மதிமுக, தனது பயணத்தில், இன்று (6.5.2025) மற்றொரு மைல்கல்லாக 32 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்து நிமிர்ந்து நிற்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் நலனுக்காக பல வெற்றிகளை பெற்றிருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை சத்தமில்லாமல் செய்து மக்களையும் மண்ணையும் காத்து நிற்கும் பெருமை மறுமலர்ச்சி திமுகவிற்கே உண்டு.
இத்தனை பெருமைகள் பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்றும் என்றும் தமிழ்நாடு அரசியல் களத்தில் தனித்த அடையாளத்தோடு மிடுக்காய் நிற்கிறது; நிற்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்/.







