கோவில்பட்டி அருகே பொன்னேர் திருவிழா-உழவுப்பணி தொடக்கம்


கோவில்பட்டி வட்டம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இன்று பொன்னேர் திருவிழா நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 60 டிராக்டர்கள் கலந்து கொண்டு ஊர் நாட்டாமை தர்மத்துப்பட்டி சாலையில் உள்ள அப்பாசாமி நாயக்கர் புஞ்சையில் ஒன்று கூடி அங்கு நனைய போட்ட பச்சரிசி, கம்பரிசி, மற்றும் நிறை நாழி கம்பு, நெல் மற்றும் நவதானியம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. சூரிய பகவானுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த பூஜையை தச்சர் குமார் ஆசாரி முன் நின்று பாரம்பரிய வழக்காறுகளின்படி நடத்தினார். அத்துடன் நவதானியங்கள் , பருத்தி விதைகள் தூவியும், புஞ்சையில் உள்ள முள் செடி மற்றும் வேண்டாத களை செடிகள் அகற்றப்பட்டு, விதை தூவப்பட்டது.
பின்னர் 60 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் ஒன்று போல் சித்திரை முதல் நாள் உழவு அதாவது நாளேர் உழவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு, மாநில இணைய தள பொறுப்பாளர் பரம்பக்கோட்டை ராஜ்குமார்,கிளை தலைவர் சௌந்தரராஜன், கனகராஜ்,ராஜாராம், முனியசாமி, யோகராஜ், கலிங்கப்பட்டி கனகராஜ், குருராஜ், ஆழ்வார்சாமி நாயக்கர், வேலுசாமி, சீனிவாசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வந்திருந்த விவசாயிகளுக்கு இனிப்பும், நனைந்த பச்சரிசி, கம்பு அரிசி, வெற்றிலை பாக்கு பரிமாறப்பட்டது. ஊருக்குள் நுழைந்த விவசாயிகளுக்கு குலவை இட்டு வரவேற்றும் தாய்மார்கள் அனைவர்க்கும் பானக்கரம், மோர் போன்றவை வழங்கினார்கள். அத்துடன் முறை பெண்கள் மஞ்சள் தண்ணீர் ஊற்றினார்கள்.
முன்னதாக ஊரில் இருந்து கிளம்பும்போது பெருமாள் கோவிலில் வழிபாடு மற்றும் விவசாயிகள் சங்க கொடி ஏற்றம் செய்தும் முதல் ஆளாக ஊர் நாட்டாமை குங்குவார் அப்பாசாமி நாயக்கர்,முன்னாள் ஊர் கிராம முன்சிப் வகையறா ( பின்ன பெத்தவ ), முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாமூர்த்திவார் ராமச்சந்திரப்ப நாயக்கர் வீட்டில் இருந்து பூஜைக்கு தேவையான பொருள்கள் மேள தாளத்துடன் எடுத்து வரப்பெற்றது.
இன்று என்றும் இல்லாத வகையில் உற்சாக விழாவாக கொண்டாடி இளைஞர்கள் மகிழ்ந்தார்கள்.
சித்திரை 1.ஸ்ரீ விசுவாசு ஆண்டில் விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தனர்









