வயநாடு மக்களவை எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி

2024 மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு என 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தனது வயநாடு எம்.பி.,பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்தது. தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார்
கேரளா வயநாடு மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரர் ராகுல் காந்தி சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4 லட்சத்துக்கும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வதேரா எம்.பி.யாக நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். கையில் அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா காந்தி பதவியேற்று கொண்டார். இதன் மூலம் மக்களவையில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், மாநிலங்களவையில் சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர். அதேபோல் நான்டட் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸின் ரவீந்திர வசந்த்ராவ் சவானும் எம்.பி.யாக பதவியேற்று கொண்டார்.
