நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கி கொண்டோம்: ரஜினியுடன் சந்திப்பு குறித்து வைரமுத்து ட்வீட்
நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினி அடுத்ததாக நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் ரஜினி கூலி படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வில் இருக்கும் நிலையில் அவரை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதைப்பற்றி வைரமுத்து சமீபத்தில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:-
கடிகாரம் பாராத உரையாடல் சிலபேரோடு தான் வாய்க்கும் அவருள் ஒருவர் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80 நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம் ஒரே ஒரு கிரீன் டீ யை தவிர எந்த இடைஞ்சலும் இல்லை. இடைவெளியும் இல்லை.
சினிமாவின் அரசியல். அரசியலின் சினிமா வாழ்வியல் – சமூகவியல் கூட்டணி கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என்று எல்லா தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன. எது குறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது. தன் முடிவின் மீது உரசிப் பார்த்து உண்மை காணும் குணம் இருக்கிறது.
நான் அவருக்கு சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை, தவத்திற்கு ஒருவர் தர்க்கத்திற்கு இருவர் நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம். ஒரு காதலியைப் பிரிவது போல் விடைகொண்டு வந்தேன். இரு தரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு. அது இதுதான். இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.