தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னையில் இருந்து கோவைக்கு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் சாலையை கடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினர். அடுத்த சிறிது நேரத்தில் பேருந்து கொளுந்துவிட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.