2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம்
இந்திய ஒலிம்பிக் சங்கம் வருகிற 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை சமர்பித்துள்ளது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் தகவல்படி கடந்த அக்டோபர் 1-ம் தேதி இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான வாய்ப்பின் மூலம் இந்தியாவுக்கான பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பலன்கள் ஏற்படும்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியும் 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து பேசியிருந்தார். அடுத்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் சங்கத்தேர்தலுக்கு பின்னர் போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்கப்படும். மேலும், இந்த தேர்தலை நடத்தும் நாடுகளுக்கான போட்டியில் சவூதி அரேபியா, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளும் உள்ளன.
இந்தியாவின் இந்த திட்டத்தை தற்போதைய ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பாஸ் ஆதரித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தியது. 2036 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் பட்சத்தில் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







