காமன்வெல்த் போட்டி 2026: கிரிக்கெட்,ஹாக்கி,மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகள் நீக்கம்
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவ் நகரில் வரும் 2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன. 2026-ம் ஆண்டில் ஜுலை 23-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 2-ம் தேதி வரை என 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பலரும் அறிந்த ஏராளமான விளையாட்டுகள் நீக்கப்பட்டு, 10 போட்டிகள் மட்டுமே நடைபெறும் என ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
அதன்படி கிரிக்கெட், பேட்மிண்டன், ஹாக்கி, மல்யுத்தம், டைவிங், பீச் வாலிபால், ரிதம் ஜிம்னாஸ்டிக்ஸ், ரக்பி செவன்ஸ், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், பாரா டேபிள் டென்னிஸ்,துப்பாக்கிச்சுடுதல் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு போட்டிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
2026-ம் ஆண்டில், கிளாஸ்கோவில் நடைபெற உள்ள கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில்., தடகளம் மற்றும் பாரா தடகளம், நீச்சல் மற்றும் பாரா நீச்சல், ஆர்ட் ஜிம்னாஸ்டிக்ஸ், டிராக் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பாரா டிராக் சைக்கிள் ஓட்டுதல், நெட்பால், பளு தூக்குதல் மற்றும் பாரா பவர் லிஃப்டிங், குத்துச்சண்டை, ஜூடோ, லான் பவுல்ஸ் மற்றும் பாரா பவுல்ஸ், 3×3 கூடைப்பந்து மற்றும் 3×3 வீல்சாக் மற்றும் கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் மட்டுமே இடம்பெற உள்ளன.
இந்நிலையில், முந்தைய காமன்வெல்த் போட்டிகளில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.மகளிர் அணியும் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.எனவே ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
துப்பாக்கி சுடுதல் மற்றும் மல்யுத்தம் போட்டிகளிலும் இந்தியா கடந்த காலங்களில் பதக்கங்களை வென்றுள்ளது. அந்த போட்டிகளும் கைவிடப்பட்டு இருப்பது, 2026 காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.







