உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்

23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.
இந்நிலையில் தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்றன. இதில் தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில், இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா-பொலிவியா அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 6-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அல்வாரஸ்,மார்டினஸ், தியாகோ ஆகியோரும் கோல் அடித்தனர்.
அர்ஜெண்டினா அணி 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பிரேசில் 4-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்தது. பிரேசில் 5 வெற்றியுடன் 16 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
