20-ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கையின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
![20-ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கையின் பந்து வீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/srilanka-team.webp)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது .இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 54 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவர்களில் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் துனித் வெல்லலகே 3 விக்கெட்டுகளும், தீக்ஷனா, அசலங்கா, ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)