சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
![சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/Mk-sralin-850x560.jpg)
சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் கனமழையால் நகரம் இயல்புநிலையை இழந்து, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை இருக்கிறது. சாலைகள், சுரங்கப்பாதைகள் மூழ்கியுள்ளன. கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முக்கிய சேவைத்துறைகளை தவிர, பிற அரசு துறைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து நிவாரண பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும். என குறிப்பிட்டுள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)