கலை, இலக்கிய கோடை கொண்டாட்டம்: பல்லாங்குழி, தாயம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடை கொண்டாட்டத்தின் 4ம் நாள் நிகழ்வாக சிறுவர் சிறுமியர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பல்வேறு பள்ளிகளின் சார்பாக 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிட்டிகுச்சி, பல்லாங்குழி,பம்பரம் சுழற்றுதல்.தாயம்.தட்டாங்கல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி அசத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி தலைமை தாங்கினார். இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகராஜ்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் நட்டாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறார் இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிமொழிநங்கை அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன், பால புரஷ்கார் விருதாளர் உதயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணகி, சிறார் இலக்கிய அமைப்பின் செயலர் பிரபு பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்வித்துறை அலுவலர்கள்,இலக்கிய அமைப்பின் நிர்வாகிகள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







