• May 20, 2024

கூட்டணிக்காக யாரிடமும் அதிமுக கெஞ்சவில்லை; டி.ஜெயக்குமார் பேட்டி

 கூட்டணிக்காக யாரிடமும் அதிமுக கெஞ்சவில்லை; டி.ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :-

தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்து, அவர்கள் உரிமையை மீட்டெடுக்கும் அளவிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும்.

திமுகவை சேர்ந்தவர்களே போதை பொருள் கடத்தியுள்ளனர். எந்த கட்சியிலும் இல்லாத அயலக அணி பிரிவு போதை பொருள் கடத்துவதற்காகவே திமுகவில் உருவாக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு ஜாபர் சாதிக் மற்றும் அவரோடு தொடர்புடையவர்கள், மேலும் அவரிடம் யாரெல்லாம் பணம் பெற்றுள்ளார்கள் என கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் மங்கை படத்திற்கு ஜாபர் சாதிக் தான் தயாரிப்பாளர் அதுமட்டுமல்லாமல் டிஜிபி யிடமே விருது வாங்கியுள்ளார்.

அவரின் பின்னணி குறித்து கூட உளவுத்துறை விசாரிக்காமல் இருந்திருக்கிறார்கள் எனவே மத்திய அரசு சுணக்கம் கட்டாமல் விரைந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

திமுக -காங்கிரஸ் கூட்டணியை பொறுத்தவரை செல்வப் பெருந்தகையின் கருத்தை பார்க்கும் போது கூட்டணி உடைவதாக தான் தெரிகிறது. அதற்காக நாங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவில்லை.

விட்டால் அதிமுக கூட்டணிக்கு சென்று விடுவார்கள் என பயந்து திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீடு செய்து வருகிறது.

 கத்திரிக்காய் விளைந்தால் கடைத்தெருவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்பது போல இன்னும் 10 நாட்களில் யார் யார் எந்தெந்த கூட்டணிக்கு தாவி செல்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வருவதற்கு கட்சிகள் தயாராக இருக்கின்றன.இன்னும் 10 நாட்களில் எந்தெந்த கட்சிகள் என்பது குறித்து பொதுச் செயலாளர் அறிவிப்பார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது. வண்டலூரில் திமுகவின் ஒன்றிய செயலாளருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது.

மத்திய அரசுக்கு மாநில அரசு பல லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கொடுக்கிறது ஆனால் யானை பசிக்கு சோளப்பொரி என்பது போல தான் மத்திய அரசு திருப்பிக் கொடுக்கிறது. இவ்வளவு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்யக் கூடாது .

இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *