• May 20, 2024

கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் பரிதாபம்: டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி- மகன் படுகாயம்

 கோவில்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் பரிதாபம்: டிராக்டர் மோதி ராணுவ வீரர் பலி- மகன் படுகாயம்

கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ரெயில்வே சுரங்க பாலம் உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக  உருவான இந்த பாலம் பொதுமக்களுக்கு இடையூறாகத்தான் இருக்கிறது.

இந்த பாலத்தின் இருபுற சுவர்களில் இருந்தும் சாக்கடை ஊற்று வந்து கொண்டே இருக்கும்.பாலத்தின் அடிப்புறத்தில் சாக்கடை நீர் அடிக்கடி தேங்கி நிற்கும்.

மழைக்காலம் என்றால் போக்குவரத்து இந்த பாலத்தில் நிறுத்தபட்டு விடும். சாக்கடை நீருடன் மழைநீரும் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும். வாகனங்கள மூழ்கும் அளவுக்கு தண்ணீர் பெருகிவிடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் அனுமதிக்கப்படும்.

இந்த பாலத்தில் அன்றாடம்  சிறு சிறு விபத்துகள் நடந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த பாலத்தில் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.

அவரது பெயர் பொன்னுராஜ்(வயது 42) கோவில்பட்டி ராஜீவ்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர். அருணாசல பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். பொன்னுராஜ் மகன் சாய் கிரிஷ் (4 ) தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறான்,

நேற்று மாலை பள்ளியில் இருந்து மகனை அழைத்து கொண்டு 4 மணி அளவில் பைக்கில் துரைசாமிபுரம் நோக்கி சென்றார். மெயின் ரோட்டில் இருந்து இளையரசனேந்தல் சாலையில் திரும்பிய பொன்னுராஜ் முன்னால் மணல் பாரம் ஏற்றி சென்ற டிராக்டரை முந்த முற்பட்டார்,

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த பொன்னுராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுவன் சாய் கிரிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறான்,.
இது பற்றி அறிந்ததும் மேற்கு போலீசார் விரைந்து வந்தனர். விபத்தில் பலியான பொன்னுராஜ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசாரின் விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர் சாத்தூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *