என்னை களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது; நாஞ்சில் சம்பத் பரபரப்பு பதிவு
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத்தும் பிரச்சாரம் செய்தார்.
தவெக ஆட்சி அமைந்த நிலையில், தவெ.க.அரசுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக.சார்பில் பிரசாரம் செய்யும் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டது.

அதில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் நாஞ்சில் சம்பத் அதிருப்தியில் அடைந்ததாக சொல்லப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டு இருந்தார்.
அதில், “போனால் போகட்டும் போடா… இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா… என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது… என்னுடைய வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது.என்னுடைய காற்றை யாரும் வழிமறிக்க முடியாது…” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் பேசியதாக ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சனம் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில், நாஞ்சில் சம்பத் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது:-
“தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த பண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை வியந்தும் விதந்தும் பேசி இருக்கிறேன்.
அந்த ஆதவ் அர்ஜுனாவை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம். தவெக என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை; கல்லறைக்குப் போகிற வரை இந்தக்கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது.”
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.







