• October 26, 2026

பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விடுவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

 பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விடுவிப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத பெருமழைக்கு உளுந்து, பாசி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய், போன்ற பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. உளுந்து, பாசி செடிகளிலேயே நெத்துக்கள் முளைத்தன. கொத்தமல்லி மார்கழி மாத பனியில் வளரக்கூடியது. அதற்கு மழை தேவை இல்லை. ஆனால் பெருமழை பெய்து செடிகள் அழுகி விட்டன.வெங்காயம் திரட்சி ஏற்பட்டு வந்த நிலையில் அதிக மழையால் சேதமடைந்துவிட்டன.

மேற்கண்ட பயிர்களுக்கு விவசாயிகள் ஏற்கனவே  பயிர் காப்பீடு செய்திருந்தனர். பெரும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், உடமைகள், கால்நடைகள், பயிர்கள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பார்வையிட்டனர். வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த மத்திய நிதி மந்திரியிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், பயிர்காப்பீடு உடனடியாக வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பரிசீலிப்பதாக உறுதியளித்த மத்திய நிதி மந்திரி  நடப்பாண்டில் பயிர்காப்பீடு செய்த கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம், வாழை, நெல் ஆகியவற்றுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொத்தமல்லிக்கு ரூ. 90 லட்சத்து 18 ஆயிரம், வெங்காயத்திற்கு ரூ.5 கோடியே 22 லட்சம், மிளகாய்க்கு ரூ.8 கோடியே 32 லட்சம் விடுவிக்கப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்கில் கடந்த இரண்டு நாட்களாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதர மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், உளுந்து, பாசி, கம்பு, சூரியகாந்தி, பருத்தி போன்றவைகள் கடந்த மழைக்கு பாதிக்கப்பட்டுள்ளன. அப்பயிர்களுக்கும் உடனடியாக நடப்பாண்டிலேயே பயிர் காப்பீடு இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், “மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் மற்றும் மேலாண்மை துறைசார்பில்  ஹெக்டர் ஒன்றுக்கு ரூ. 8500 வீதம் கணக்கெடுக்கபட்டு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். அதையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.கடுமையான நெருக்கடியான வேளையில் பயிர் காப்பீடு விடுவித்திருப்பதற்கு விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று  கூறியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *