• June 8, 2025

கன்னி பூஜையில் ஐயப்பன் பஜனை ; மாலை அணிந்தவர்களுக்கு பாதபூஜை

 கன்னி பூஜையில் ஐயப்பன் பஜனை ; மாலை அணிந்தவர்களுக்கு பாதபூஜை

ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு கார்த்திகை மாதமும் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் கடும் விரதம் இருந்து காலை, மாலை என இருவேளையும் தினமும் ஐயப்பனுக்கு பூஜை செய்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

மாலை அணியும் பக்தர்கள் ஐயப்பனுக்கு உகந்த கருப்பு, நீலம், பச்சை இவற்றில் ஒரு நிற உடையை மட்டுமே அணிய வேண்டும்.

புதிதாக மாலை அணியும் பக்தரை கன்னிசாமி என்று அழைப்பர். இந்த கன்னிசாமி எனப்படும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக 48 நாட்கள் விரதம் இருந்து தங்களது வீடு அல்லது கோவிலில் கன்னிபூஜை நடத்தி, பின்னர் இருமுடி கட்டிதான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் கோவில்பட்டி செக்கடி தெருவில் வசிக்கும் டி.வி.எல்.எஸ்.உரிமையாளர் எல்.ரத்தினகுமார் நேற்று இரவு  தனது வீட்டில் கன்னி பூஜை நடத்தினார். இதையொட்டி பதினெட்டு படிக்கட்டுகள் அமைத்து ஐயப்பன் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்து இருந்தார்.

கன்னி பூஜைக்கு சுமார் 200 ஐயப்ப பக்தர்கள் வரை வந்து இருந்தனர். அவர்களுக்கு பாதபூஜை நடத்தும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் கன்னிசாமி எல்.ரத்தினகுமார் தனது தாயாருக்கு பாதபூஜை நடத்தினார். தொடர்ந்து பஜனைக்கு வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் தனித்தனியாக பாத பூஜை நடத்தினர். சுமார் 1 1/2 மணி நேரம் வரை இந்த பூஜை நடந்தது.

தொடர்ந்து பஜனை பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 பஜனை குழுவினர் மேள வாத்தியங்கள் முழங்க ஐயப்பன் பாடல்கள் பாடப்பட்டன. . பக்தர்கள் கரவொலி எழுப்பி பக்தி பரவசத்துடன் ஐயப்பன் பாடல்களை பாடினார்கள்.

ஒவ்வொரு பாடல்கள் முடிவிலும் பதினெட்டாம்படி ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பஜனை பாடல் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து ஐயப்பனுக்கு பூஜை நடத்தப்பட்டு சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் ஐயப்பன் பாடலை பாடி கன்னி பூஜையை நிறைவு செய்தனர்.

இதை தொடர்ந்து பூஜையில்  பங்கேற்ற பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. கன்னிசாமி அனைவருக்கும் விபூதி பூசி வாழ்த்தினார்.

முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் இரவு விருந்து பரிமாறப்பட்டது. ஐயப்ப குருமார்களுக்கு கன்னிசாமி சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.

 .

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *