தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்த அதிகாரி ஆய்வு
மதுரை கோட்டத்தின் கீழ் தூத்துக்குடி உள்ளிட்ட 17 ரெயில் நிலையங்கள் மத்திய அரசின் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நவீன மயமாக்கப்பட உள்ளன.
இதையொட்டி தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இன்று மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமையிலான ரெயில்வே அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் பசுமை பூங்கா அமைப்பது, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சாலையை அகலப்படுத்தி பார்க்கிங் வசதி செய்வது, பயணிகளுக்கான தங்கும்அறை, சுகாதார வசதிகள், இன்னொரு நுழைவாயில் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தினார்.
பின்னர் மதுரை கோட்ட பொது மேலாளர் சரத் ஸ்ரீவத்வா செய்தியாளரிடம் பேசுகையில் கூறியதாவது:-
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரெயில் நிலையத்தை நவீனமயமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் முடிவடைய வாய்ப்புள்ளது. பணிகளின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி- பாலக்காடு இடையே விரைவில் பாலருவி லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து போன்று இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தீ விபத்துக்கள் ரெயிலில் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் ரெயிலில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பட்டாசுகள், சிலிண்டர்கள் உள்ளிட்ட தீ பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.
எனவே பயணிகள் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை ரெயில் பெட்டிகளில் கொண்டு செல்லக்கூடாது . மேலும் தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு ரெயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த கட்டமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.







