பெண் குழந்தைகள் தினம்: கோவில்பட்டி பள்ளியில் மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு
நாடு முழுவதும் அக்டோபர் 11ம் தேதி (இன்று) பெண் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்திடவும், பெண் குழந்தைகளை வரவேற்று, பாதுகாத்து, போற்றிடவும் உலக பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புதுரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினவிழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு கிரீடம் சூட்டி கவுரவிக்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் நாராயணசாமி, வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் சுப்பாராயன் அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் முத்து செல்வம் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி கவுரப்படுத்தினார்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் மாரியப்பன், கிருஷ்ணசாமி, வேல்முருகன், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க இணை செயலாளர் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்.







