கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப் போட்டி தொடக்கம் ; ரசிகர்கள் ஆரவாரம்

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 12-வது அகில இந்திய ஆக்கி போட்டிகள் மே 18ம் தேதி(இன்று )முதல் 28ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடக்கிறது.
இன்று மாலை 5.15 மணி அளவில் தொடக்க விழா நடைபெற்றது. கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர்கள்.
முதல் போட்டியை தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டு அலுவலர் பி.ராமசாமி தொடங்கி வைத்தார்.
விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல் அனைவரையும் வரவேற்றார். கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி.சங்கரநாராயணன், நேஷனல் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.காளிதாஸ முருகவேல், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.மதிவண்ணன், ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்ர சண்முகபாரதி மற்றும் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன், ஆடிட்டர் பாலசுப்பிரமணி, வழக்கறிஞர் சம்பத்குமார், மற்றும் ஆக்கி வீரர்கள்,ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
எ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக பிரித்து, எ பிரிவில் பஞ்சாப் நேஷனல் பேங்க் – நியூ டெல்லி, ரயில் வீல் பேக்டரி – பெங்களூர், நிஸ்வாஸ் ஆக்கி அணி – பாம்போஷ், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் – சென்னை, பி பிரிவில் காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா – நியூ டெல்லி, யூனியன் பேங்க் – மும்பை, சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே – ஹூப்ளி, எஸ்.டி.ஏ.டி.எக்ஸலன்ஸ் – கோவில்பட்டி, சி பிரிவில் சவுத் சென்ட்ரல் ரெயில்வே – செகந்திராபாத், கனரா பேங்க் – பெங்களூரு, கஸ்டம்ஸ் – புனே, இந்தியன் பேங்க் – சென்னை, டி பிரிவில் பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு – நியூ டெல்லி, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ் – சென்னை, சாய் எஸ்.டி.சி. – பெங்களூரு மற்றும் தமிழ்நாடு போலீஸ் – சென்னை ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.


இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.
இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணியளவில் நடந்த முதல் லீக் போட்டியில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணியும், மும்பை யூனியன் பேங்க் அணியும் மோதின.
ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் பிரவிந்தர் சிங் பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.
21-வது நிமிடத்தில் மும்பை யூனியன் பேங்க் அணி வீரர் வினோத் ஷைனி பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டு சம நிலைக்கு கொண்டு வந்தார்
29-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் ராயூஷன் குமார் ஒரு பீல்டு கோல் போட்டு அணிக்கு பலம் சேர்த்தார்.
இதை தொடர்ந்து ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.59-வது நிமிடத்தில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வீரர் சந்தன் சிங் பெனால்டி ஸ்டோக் முறையில் ஒரு கோல் போட்டார்.
இறுதியில் 3:1 என்ற கோல் கணக்கில் நியூ டெல்லி காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா அணி வெற்றி பெற்றது.
ஹசன் அலி மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

2வது லீக் ஆட்டத்தில் நியூ டெல்லி பஞ்சாப் நேஷனல் பேங்க் அணியுடன் பெங்களூர் ரயில் வீல் பேக்டரி அணி மாலை 6.30 மணியளவில் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வீரர்கள் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டனர். இதையடுத்து பெங்களுரு அணி வீரர்கள் பதிலுக்கு ஒரு கோல் போட்டனர்.இறுதியில் 3: 1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
3வது லீக் ஆட்டத்தில் ஹூப்ளி சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணியுடன் கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணி இரவு 8.30 மணியளவில் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. உள்ளூர் ரசிகர்கள் ஆரவாரம் செய்து போட்டியை ரசித்தனர். இதில் 6-2என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள் கே.ரகு, ஆர்.ராம்குமார், ஆர்.சிவராஜ், ஆக்கி பயிற்சியாளர்கள், அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
நாளை (19.5.2023) நடைபெறும் இப்போட்டிகளின் விவரம்:
1. சவுத் சென்ட்ரல் ரெயில்வே- செகந்திராபாத் மற்றும் கனரா பேங்க், பெங்களூரு (மாலை 5.15)
2. பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு-நியூ டெல்லி மற்றும் தமிழ்நாடு போலீஸ், சென்னை (மாலை 6.45)
3. காம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா- நியூ டெல்லி மற்றும் சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே, ஹூப்ளி (இரவு 8.15)
