கோவில்பட்டி மகாகவி பாரதி விழாவில் பல்வேறு நூல்கள் வெளியீடு
அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் சார்பில் கோவில்பட்டி தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயாவில் மகாகவி பாரதி விழா நடைபெற்றது. அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் தலைவர் ஆவடிக்குமார் தலைமை தாங்கினார், முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் பேசினார்.
இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செ.முருகசரஸ்வதி எழுதிய எரிமலையின் மௌனங்கள் என்ற நூலை தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குநர் சேகர், கவிஞர் முருகேஸ்வரி ராஜேஸ்வரி எழுதிய விதை என்ற நூலை ராமநாதபுரம் கம்பன் கழகத் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் வெளியிட, அவற்றின் முதல் பிரதியை முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து முனைவர் ஜெ.பிரேமா பார்வதி எழுதிய தூவலின் தூறல் என்ற நூலை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் வெளியிட, அதன் முதல் பிரதியை கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி முதல்வர் சாந்திமகேஸ்வரி, வீரன் வயல் வீ.உதயகுமாரன் எழுதிய பெருங்களத்தூர் பேருந்து நிலையம் என்ற நூலை பாரதியார் தமிழ்ச்சங்கத் தலைவர் துரைமுருகன் வெளியிட, அதன் முதல் பிரதியை நாகலாபுரம் அரசு கலை கல்லூரி பேராசிரியர் சுரேஷ்பாண்டியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் கவியரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. செந்தமிழ் தேனீ, தமிழ்ச்சாதனையாளர்கள், சிந்தனை சிற்பி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை அனைத்திந்திய தமிழ்ச்சங்க தென்மண்டல துணைத் தலைவர் பிரேமாபார்வதி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வட்டாட்சியர் சுரேஷ், இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர், பிராமண மகா சபை செயலர் ராமசுப்பிரமணியன், ஜெய் கிறிஸ்ட் அறக்கட்டளை நிறுவனர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், அனைத்திந்திய தமிழ்ச்சங்க தென்மண்டல செயலர் கலா கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மற்றும் பாரதி வேடமணிந்த மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.







