கி.ராஜநாராயணன் சொந்த ஊரில் நினைவு மண்டபம் கட்டும்பணி; வைகோ தொடக்கி வைத்தார்
கரிசல் இலக்கத்தின் பிதாமகர் சாகித்ய அகடாமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா. என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நூற்றாண்டு விழா மற்றும் நினைவு மண்டபம் கட்டும் விழா கோவில்பட்டி அருகே உள்ள கி.ரா. பிறந்த ஊரான இடைச்செவல் கிராமத்தில் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பங்கேற்று
நினைவு மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் கூறியதாவது:-
கி.ரா. நாவல்கள், சிறுகதைகள்.. கரிசல் இலக்கியங்கள், வட்டார சொல் அகராதி எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் அவருக்கு நிகர் எவரும் கிடையாது .கி.ரா எழுதியது எல்லாம் இங்கு வாழ்ந்த மக்களை பற்றியது. கி.ரா தனது புத்தகங்களில் எழுதிய நிகழ்வு திரைப்படங்களில் காட்சிகளாக வந்துள்ளன.
கி.ரா. எழுத்தில் நகைச்சுவை, சோகம், காதல் இருக்கும்.கி.ராவின் எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்கும். அந்தரங்கபட்சி என்ற நாவல் கடைசியாக எழுதினார். ஆனால் அச்சாகவில்லை. கோவில்பட்டியில் கி.ராவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அழகான மணி மண்டபம் அமைத்திருக்கிறது.இடைச்செவல் கிராமத்தில் கட்டப்படும் நினைவு மண்டபத்திற்கு எனது சார்பில் ரூ 1 லட்சம் நன்கொடை தருகிறேன்.
இவ்வாறு வைகோ பேசினார்.







